
எனது உத்தரவுப்படி மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அரசு செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை, மீன்வளத் துறை ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர், தலைமை பொறியாளர், மீன்பிடி துறைமுக கோட்டம், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் இதர அரசு அதிகாரிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேதமடைந்த நடுக்குப்பம் மீன் சந்தையை கடந்த 28 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் போது பாதிக்கப்பட்ட மீன் சந்தையை முழுவதும் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட அப்பகுதி மீனவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.
அப்போது நடுக்குப்பம் மீன் விற்பனை சந்தை முழுவதுமாக சேதமடைந்ததை கண்டறிந்தனர். மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த மீன் விற்பனை சந்தையை உடனடியாக சீரமைத்துத் தருவது அவசியமாகும்.
இதனடிப்படையில், தற்காலிகமாக மீன் விற்பனை செய்ய ஏதுவாக சாலையின் தெற்கு பகுதியில் மீன் வளத் துறை மூலம் தற்காலிக சந்தை அமைக்கப்படும்.
இது இன்னும் ஒரிரண்டு நாட்களில் முடிக்கப்பட்டு விடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், நிரந்தர மீன் விற்பனை சந்தை ஒன்று அந்தப் பகுதியில் அமைத்துத் தரப்படும்.
சென்னை பெருநகர மாநகராட்சி மூலம் சாலையின் வடக்கு பகுதியில்
70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு நிரந்தர, நவீன மற்றும் சுகாதாரமான மீன் சந்தை உடனடியாக அமைத்துத் தரப்படும்.
சமூக விரோதிகளால் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களில் நடுக்குப்பம் மட்டுமல்லாது அருகிலுள்ள மாட்டாங்குப்பம் மற்றும் அயோத்தி குப்பம் மீனவர்களின் உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் சேதமடைந்த உபகரணங்கள் குறித்து மீன்வளத் துறை அலுவலர்கள் உடனடியாக கள ஆய்வு செய்து மதிப்பீடு செய்வார்கள்.
இந்த சேத மதிப்பீட்டின் அடிப்படையில் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிவித்தார்.