பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் முறையாக பெண் ஆட்சியர் நியமனம்…

 
Published : Jun 05, 2017, 06:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் முறையாக பெண் ஆட்சியர் நியமனம்…

சுருக்கம்

First time woman collector appointed in Perambalur district

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வே.சாந்தா புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாஅர். ஒரு பெண் இம்மாவட்டத்தில் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இதுவரை பணிபுரிந்த நந்தகுமார் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு பணிமாற்றலாகிச் சென்றார்.

அவருக்குப் பதிலாக பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வே.சாந்தா நேற்று பொறுப்பேற்றார்.

பணிமாற்றலாகிச் சென்ற முந்தைய ஆட்சியர் நந்தகுமார், புதிய ஆட்சியரிடம் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய ஆட்சியர் வே.சாந்தா, பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் ஆவார். இவர் 1997-ல் துணை ஆட்சியராக அரசுப் பணியில் சேர்ந்தார். அதன்பின் நீலகிரி மாவட்டம் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஆகவும், கோபிசெட்டிப்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆகவும் பணிபுரிந்தார்.

பின்பு பதவி உயர்வுபெற்று தமிழ்நாடு உணவுப்பொருள் விநியோக நிறுவனத்தின் சென்னை வடக்கு மண்டல முதுநிலை மேலாளர் ஆகவும், 2005 முதல் 2007-ஆம் ஆண்டு வரை ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர துணை ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார். அதன்பின்பு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மேலாண்மை இயக்குனர் - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலராகவும் பணிபுரிந்து அங்கிருந்து பணிமாற்றலாகி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று உள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக வே.சாந்தா பதவியேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் முனைப்பாக செயல்படுத்தப்படும். மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் செயல்படுத்தப்படும்.

இம்மாவட்டத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக அவர்களது திறன் மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தப்பட்டு பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுவற்கான அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

முந்தைய ஆட்சியர் விட்டுச்சென்ற சுற்றுச்சூழல் பராமரிப்பு, நீர்நிலைகள் மேம்பாடு, விளையாட்டுத்துறை வளர்ச்சி ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!