
விருதுநகர்
பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி ஜனவரி 10-ஆம் தேதி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
இதுகுறித்து நான்கு வாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், வரும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கொள்முதல் செய்ய விற்பனையாளர்கள் யாரும் ஆர்டர் மற்றும் முன்பணம் கொடுக்கவில்லை. இதனால், பட்டாசுத் தொழில் நிலையற்று இருப்பதாகவும், பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 870 பட்டாசு ஆலைகளும் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் மூடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால், பட்டாசு மூலப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், பட்டாசுத் தொழிலை பாதுக்கவேண்டும் என, பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக ஜனவரி 3-ஆம் தேதி சிவகாசியில் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அதே நாள், அனைத்துக் கட்சியினரின் ஆர்ப்பாட்டம், மாவட்ட பட்டாசு - தீப்பெட்டித் தொழிலாளர்கள் (சிஐடியூ) சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதனிடையே, ஜனவரி 5-ஆம் தேதி கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கினை ஜனவரி 22-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து நேற்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. ஆசைதம்பி செய்தியாளர்களிடையே கூறியது:
"பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், சிவகாசியில் தினசரி ரூ. 20 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலை சார்ந்த அச்சுத் தொழில், காகித அட்டைப் பெட்டி தயாரிப்புத் தொழில் என பல தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழக்கை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. எனவே, எங்கள் போராட்டம் தொடந்து நடைபெறும். மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் தற்போது திறக்கப்படமாட்டாது.
எங்கள் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி, ஜனவரி 10-ஆம் தேதி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதப் போராட்டம், சிவகாசி - திருத்தங்கல் சாலையில் உள்ள குறுக்குப் பாதை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும். மேலும், மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடத்தத் திட்டமிட்டு உள்ளோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.