பட்டாசு தொழிலில் 200 கோடி இழப்பு; 5 இலட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு; புதிய விதிகளே காரணம்…

First Published Mar 1, 2017, 10:13 AM IST
Highlights
Fireworks 200 million loss in the industry 5 million impact on the livelihood of workers Due to the new rules


சிவகாசி

பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளால் பட்டாசு தொழிலில் 200 கோடி இழப்பும், 5 இலட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும் உள்ளது என்று பட்டாசுக் கடை உரிமையாளர்கள் 12 நாள்களாக கடைகளை அடித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்படவுள்ள புதிய விதிகளை தளர்த்தக்கோரி பட்டாசு கடைகளை அடைத்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆலை அதிபர்களும் ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பட்டாசு தொழில் முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது.

இதுகுறித்து பட்டாசு கடை உரிமையாளர்கள் தெரிவிப்பது என்னவென்றால், “நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட குழு வெடிப்பொருள் விதிகள் மற்றும் செயல்முறைகள் பற்றி அறிந்திருக்கவில்லை. தக்க அறிவியல் ஆராய்ச்சிகளோ வல்லுநர்களின் கருத்தோ தொழில் சார்ந்த எவரிடமும் ஆலோசிக்காமல் தங்களுடைய பரிந்துரைகளால் நாட்டில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டாசு கடைகளுக்கான புதிய வரைவு விதிகள் பற்றி நாட்டில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனையாளருக்கும் தற்போது தெரிய வந்துள்ளதால் தொழிற்சாலைகளில் பட்டாசு வாங்க யாரும் முன் வருவதில்லை.

பட்டாசு கொள்முதல் செய்ய தொழிற்சாலைகளுக்கு கொடுத்த பணத்தையும் விற்பனையாளர்கள் திரும்ப கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு கடைகளும் தொழிற்சாலைகளும் வேறு வழியின்றி கடந்த 12 நாள்களாக மூடி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பட்டாசு உற்பத்தியில் ரூ.200 கோடி இழப்பும், சார்பு தொழில்களும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

புதிய வரைவு விதிகள் நடைமுறைக்கு முன்னரே ஒட்டு மொத்தமாக பட்டாசு தொழில் மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

இதற்கு தீர்வாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நீதிமன்ற நியமன குழுவின் பரிந்துரைகள் சாத்தியமில்லாதவை என நிராகரிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக பட்டாசு கடைகளையும் தொழிற்சாலைகளையும் மூடுவது அரசின் கொள்கை முடிவு அல்ல என்பதை தெளிவுபடுத்தி தொழிலை காப்பாற்ற வேண்டுமென பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தங்களது எதிர்ப்பினை அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று (புதன்கிழமை) பட்டாசு கடைகளிலும் ஆலைகளிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருத்தங்கல் குறுக்குப்பாதை திடலில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள வர்த்தக சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

 

click me!