
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, கார் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த மூவர் பலத்த காயம் அடைந்தனர். லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே இருக்கும் பொன்பரப்பட்டைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் கோபி கிருஷ்ணன் (21). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 4–ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இவருடன் கள்ளக்குறிச்சி அருகே புத்தந்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கோகுல கிருஷ்ணன் (21) மற்றும், கள்ளக்குறிச்சி அருகே பரமநத்தத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் அசோக் (22) ஆகியோரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் மூன்று பேரும் விடுமுறைக்காக தங்களுடைய வீட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் விடுமுறையை கழித்துவிட்டு கல்லூரிக்கு புறப்பட முடிவு செய்தனர்.
அதன்படி அசோக்குக்கு சொந்தமான காரில் சென்னைக்குச் செல்வதற்காக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் அசோக்கின் அப்பா அன்பழகனும் பயணம் செய்தார். காரை அசோக் ஓட்டினார்.
இந்த கார் கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, கார் மீது அதிவேகமாக மோதியது.
இதில் கோபிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அசோக், அன்பழகன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த அசோக் உள்ளிட்ட மூன்று பேரையும் மீட்டுச் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் கோபிகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றிய காவலாளர்காள், உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுச் சென்றனர். இதுகுறித்து கோபிகிருஷ்ணனின் அப்பா சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.