
சங்கராபுரம்
விழுப்புரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் இரண்டாவது நாளாக மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில், திராளான அடியார்கள் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வருகைத் தந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயானக் கொள்ளை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 24–ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சக்தி கரகம் அழைத்தல் மற்றும் சிறப்பு பூசை நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரியநாயகி அம்மன் ஊர்வலமாக மணிநதிக்கரையில் உள்ள மயானத்தைச் சென்றடைந்தனர்.
அப்போது அடியார்கள் சிலர், சிவன், அம்மன், காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக மயானத்திற்குச் சென்றனர். இதனையடுத்து அங்கு மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.
அப்போது அடியார்கள் சிலர் அருள் வந்து ஆடியபடி, ஆடு, கோழி உள்ளிட்டவைகளை வாயில் கடித்து, ரத்தம் குடித்தனர். இதனையடுத்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் சங்கராபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான அடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
பல கிராமங்களில் இருந்து இந்த விழாவைக் காணவந்தவர்கள் இரண்டு நாள்கள் அங்கேயே தங்கியிருந்து முழு மயானக் கொள்ளை மற்றும் அபிஷேகம், வழிபாடுகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.