
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதி செல்லும் வழியில் இருந்த 35 கடைகள் எரிந்து சாம்பலாயின. கோவிலுக்குள் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் இரு பக்கங்களிலும் வளையல்கள், அலங்கார பொம்மைகள், விபூதி-குங்குமம் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
நேற்று இரவு 10 மணி அளவில் கோவில் நடை முழுவதும் சாத்தப்பட்டு கோவில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் இரவு சுமார் 10.30 மணி அளவில் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து கரும்புகை வெளி வருவதை பார்த்த பக்தர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தல்லாகுளம், பெரியார் பஸ் நிலையம், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு படையினரும், விளக்குத்தூண், தெற்குவாசல் போலீசாரும் விரைந்து வந்தனர்.
அவர்கள் வந்தபோது ஆயிரங்கால் மண்டபத்தை ஒட்டியிருந்த கடைகளில் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. உடனே தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் 35 -க்கும் மேற்பட்ட கடைகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. சுமார் 2½ மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கலெக்டர் வீரராகவராவ், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகியோர் நேரில் வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விளக்ககுத்தூண் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.