கைரேகை விவகாரம் இயல்பான ஒன்று – பண்ருட்டியார் பளிச்

First Published Nov 3, 2016, 10:59 PM IST
Highlights


இடைதேர்தலுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை வைத்த விவகாரம், இயல்பான ஒன்று என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர், பிசியோதெரபி நிபுணர்கள் குழுவினர் அளித்து வரும் தீவிர சிகிச்சையால் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், நன்றாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது., இதே நிலை தொடர்ந்தால் அவர் ஒரிரு நாட்களுக்குள் பூரண குணமடைவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்போது மருத்துவமனையில், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளார். விரைவில் அவர் குணமடைந்து பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல முறையிலே முன்னேற்றம் அடைந்து வருகிறார். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாட்டு மக்களும் நம்பிக்கையோடும், நல்ல எண்ணத்தோடும் அவர்களும் இந்த செய்தியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு அவர்கள் இதுவரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக செய்த பிரார்த்தனைகள் எல்லாம் இன்றும் பலனளித்து வருகிறது என்பதை நாங்கள் கண்கூடாக கண்டோம்.

மீண்டும் தமிழ்நாடு அரசை பொறுப்பேற்று சிறந்த முறையிலே ஏழை–எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுவார். கைரேகை விவகாரம் இயல்பான ஒன்று. சொல்லப்போனால் கையெழுத்தைக்கூட நம்பாமல், கைரேகை முக்கியம் என்று இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் சொல்கிறார்கள். கைரேகை என்பது பழங்காலத்தில் இருந்து வரும் ஒன்றுதான். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த விவகாரத்தை தேவையற்ற முறையிலே பிரச்சனையாக எழுப்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!