
தமிழகத்தில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும். திருச்சியில் இருந்து காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் பிரதான சாலை இதுவாகும். இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இந்த சாலையில் இன்று மதியம் சிறிய ரக போர் விமானம் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென விமானம் சாலையில் தரையிறங்கியதால் அப்பகுதி மக்கள் என்னமோ, ஏதோ என்று பதற்றத்தில் ஓடி வந்தனர். அந்த விமானத்தில் 2 பேர் இருந்தனர். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில் சாலையில் தரையிறங்கியது சிறிய ரக போர் பயிற்சி விமானம் என்றும் சேலத்தில் இருந்து புறப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முன்பகுதி சேதம் அடைந்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த விமானத்தை தேசிய நெடுஞ்சாலையில் அவசரம் அவசரமாக தரையிறக்கியுள்ளனர். நல்லவேளையாக விமானம் தரையிறங்கியபோது அந்த இடத்தில் வாகனங்கள் ஏதும் செல்லவில்லை. இல்லாவிடில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். விமானத்தில் இருந்தவர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. விமானம் நடுரோட்டில் தரையிறங்கியதை அறிந்தவுடன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு
பாதுகாப்பு கருதி அவர்களை விமானம் அருகே செல்ல காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. விமானம் தரையிறங்கியதால் திருச்சி, புதுக்கோட்டையில் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பழுதடைந்த விமானத்தை சரி செய்ய தஞ்சாவூரில் இருந்து பொறியாளர்கள் வருவார்கள் என்றும் அதன்பிறகு அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானம் தரையிறங்கிய சம்பவம் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.