சூரிய பொங்கல், மாட்டு பொங்கல் போல நரிப் பொங்கல் கொண்டாட்டம்; தடை இருந்தும் சேலத்தில் கோலாகலம்...

First Published Jan 18, 2018, 8:50 AM IST
Highlights
Festive pongal celebration like sun pongal cow pongal There is no ban in Salem ...


சேலம்

சேலத்தில் தடையை மீறி வங்காநரி பொங்கலை பல வருடங்களுக்கு பிறகு கிராம மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். தடையை மீறி வங்காநரியை பிடித்த இருவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நரி முகத்தில் முழித்தால் யோகம் என்று கூறுவர். அதையே ஒரு பொங்கல் விழாவாக சேலம் மாவட்டம், வாழப்பாடி கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில், வாழப்பாடியில் உள்ள சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர், மத்தூர், தமையனூர், பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, கோபாலபுரம், ஏத்தாப்பூர் மேலாவரம் உள்ளிட்ட கிராமங்களில், கரடு, தரிசுநிலப்பகுதியில் இருந்து ‘வங்கா நரி’யை பிடித்து "நரி பொங்கல்" நடத்தும் வினோத பாரம்பரியம் இன்றளவும் இங்கு தொடர்கிறது.

வருடந்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி கரி நாள் அன்று மாலையில் கிராம மக்கள் கிராமத்தையொட்டி உள்ள தரிசு நிலங்கள் மற்றும் கரட்டுப் பகுதிகளில் வலைவிரித்து வைத்துவிட்டு வருவர். அன்றிரவோ, அடுத்த சில நாட்களிலோ அந்த வலையில் வங்கா நரி பிடிபட்டால் அன்றைய தினமே அந்தக்க் கிராமத்தில் வங்கா நரி பொங்கல் கொண்டாடப்படும்.

அவ்வாறு பிடிபடும் வங்கா நரியை கிராம மக்கள் மாரியம்மன் கோவில் வளாகத்திற்கு ஊர்வலமாக கொண்டுவந்து குங்குமத்தால் அலங்கரித்து காலில் கயிற்றை கட்டி சிறிது தொலைவு ஓடவிடுவர். பின்னர் கிராம மக்களுக்கு நரியை காண்பிப்பர். இறுதியாக அந்த நரியை பிடித்த நிலப்பகுதிக்கே கொண்டுச் சென்று விட்டு விடுவர்.

ஆனால், வங்கா நரியை வலைவிரித்து பிடித்து பொங்கல் கொண்டாட வனத்துறையினர் தடை விதித்ததால் இந்தப் பொங்கல் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வங்கா நரி பொங்கல் கொண்டாட சின்னமநாயக்கன் பாளையம் கிராம மக்கள் ஊருக்கு வெளியே தடையை மீறி வலையை விரித்தனர். இந்த வலையில் நேற்று காலையில் வங்கா நரி ஒன்று பிடிபட்டது. இதையறிந்த கிராம மக்கள் அங்கு மேளதாளங்களுடன் விரைந்துச் சென்றனர்.

பின்னர், அங்கிருந்து வங்கா நரியை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்த கிராம மக்கள் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கூடினர். அங்கு வங்கா நரிக்கு குங்குமமிட்டு அலங்காரம் செய்து சாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பின்னர், கூடியிருந்த ஊர் மக்களுக்கு வங்கா நரி உயர்த்தி காண்பிக்கப்பட்டது. அதையடுத்து அந்த நரி காலில் கயிறு கட்டப்பட்டு சிறிது தொலைவு ஓடவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வங்கா நரியை அந்த கிராம மக்கள் ஊருக்கு வெளியே கொண்டுச் சென்றுவிட்டனர்.

வனத்துறை தடையை மீறி மக்கள் வங்காநரியை பிடித்து பொங்கல் பண்டிகை கொண்டாடியதால் இராமசாமி, சங்கர் ஆகிய இருவருக்கு வாழப்பாடி வனச்சரகர் சந்திரசேகரன் தலைமையிலான வனத்துறையினர் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள், "வங்காநரி வனத்தில் வாழும் விலங்கு அல்ல. கிராமத்தையொட்டியுள்ள பயன்படாத தரிசுநிலங்கள், கரடு, சிறிய குன்றுகளிலேயே வாழ்கின்றன. நரி முகத்தில் விழித்தால் நன்மை கிடைக்கும் என்ற முன்னோர்களின் நம்பிக்கை தொடர்ந்து வருவதால், வங்காநரி பொங்கல் கொண்டாடுகிறோம்.

ஆனால், வங்காநரி வனவிலங்கு பட்டியலில் இருப்பதாகக்கூறி அதை பிடிப்பதற்கு வனத்துறை தடை விதித்து விட்டது. இருப்பினும் முன்னோர்கள் காலம் தொட்டு மரபு மாறாமல் வழிவழியாக தொடர்ந்து வந்த வங்காநரி பொங்கல் நடத்துவதை கைவிட மனமில்லை. இதனால் இந்த ஆண்டும் வங்காநரி பிடித்து நரியாட்டம் நடத்தி மக்களுக்கு நரியை காண்பித்து விட்டு, மீண்டும் அதை பிடித்த நிலப்பகுதியிலேயே விட்டு விட்டோம்" என்று தெரிவித்தனர்.

click me!