
தொடர் விடுமுறை:
நாளை முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து வெளியூர் செல்லும் மக்களுக்கு ஏதுவாக சென்னையில் இருந்து 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.சித்திரை 1 ஆம் தேதி தமிழ் வருட புத்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை 14 ஆம் தேதியும், நாளை மறுநாள் புனித வெள்ளியையொட்டி 15 ஆம் தேதியும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 17 ஆம் தேதி வார விடுமுறை என்பதால் சனிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
சிறப்பு பேருந்து:
இதனையடுத்து வரும் ஏப்ரல் 16 ஆம் தேதியும் விடுமுறை அளித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், இன்றும் நாளையும் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
1,200 பேருந்துகள் இயக்கம்:
இதே போல் பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்ரல் 17 ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து கோவை, சேலம், நாகை, வேளாங்கண்ணி, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் நகரகங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதே போல் வரும் ஏப்ரல் 16 ஆம் சித்ரா பவுணர்மி அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று கிரிவலம் செல்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிவர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதால்,இந்த முறை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கபடுவதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
சித்ரா பவுணர்மி:
இதனால் ஏராளமான மக்கள் பயணி புரிவதால், சிதர் பவுணர்மி அன்று மக்கள் வசதிக்கேற்ப போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய நகரங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று 500 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.