
திருப்பூர்,
மழைக்காலங்களில் சேதம் ஏற்படாதவாறு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆட்சியர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், “திருப்பூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி, ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்நிலை புறம்போக்குகளில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் இதர ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றுவதற்குக்கான நடவடிக்கைகளை அனைத்து அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களில் சேதம் ஏற்படாதவாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை துரிதமான முறையில் மேற்கொண்டு அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்றுத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா இராமசாமி, ஆர்.டி.ஓ. சாதனைக்குறள் (உடுமலை), இராஜலட்சுமி (தாராபுரம்), துணை ஆட்சியர்கள் சுகவனம், பழனியம்மாள், காமாட்சிதாசன், ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ரவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பு, அனைத்து தாசில்தார்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.