
காவிரி மேலாண் வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி போராட்டம் நடத்த முயன்ற 35 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழர்களின் உடமைகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள், தமிழர்களின் வாகனங்கள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இதுதொடர்பாக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 1 முதல் 6ம் தேதி வரை காவிரி நீரை விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், காவிரிநீர் தருவதற்கு மறுப்பு தெரிவித்தது. மத்திய காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியதை கண்டித்து, திருச்சி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை போராட்டம் நடத்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது.
அதன்படி சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று நெற்றியில் பட்டை நாமமிட்டு, மேல் சட்டை அணியாமல், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு காவிரி பாலத்துக்கு வந்தனர்.
தகவறிந்து உதவி கமிஷனர்கள் பெரியய்யா, சச்சிதானந்தம், முருகேசன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் காவிரி பாலத்தில் குவிக்கப்பட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு, விவசாயிகள் பாலத்தை நோக்கி வந்தனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் அம்மா மண்டபம் வரை பேரணியாக செல்ல அனுமதித்தனர். இதையடுத்து, விவசாயிகள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். அப்போது திடீரென அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகள் பாலதடுப்பு கட்டையில் ஏறி குதிக்க முயன்றனர்.
உடனே போலீசார், விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால, ஆத்திர மடைந்த விவசாயிகள் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டு கொண்டே சாலையில் படுத்து உருண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், அய்யாக்கண்ணு உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு, அரசியல் நோக்கோடு நடக்கிறது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டி விட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் நிலையை உணர்ந்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் பெரியளவில் நடத்தப்படும்’’ என்றார்.