
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்களது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் தமிழகம் எங்கும் வறட்சி நிலவி பொட்டல் காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், விவசாயிகள் கடன் ரத்து, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய சிறு-குறு கடன்களை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு தமிழ் நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அரசாணை வெளியிட்டது.
அதில் ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் மற்றும் நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது.
இது பார பட்சமாக உள்ளதாகவும், அனைத்து விவசாயிகளின் பெயரில் உள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அய்யாக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்த விசாரணை முடிவுற்றநிலையில், தமிழக அரசு சலுகை வழங்கும்போது அதில் பாரபட்சம் காட்டக்கூடாது எனவும், 5 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் கடன் மற்றும் பயிர் கடன்களை ரத்து செய்வதை ஏற்க முடியாது எனவும், 3 மாதத்திற்குள் தமிழக அரசு அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிரபித்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்களது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என அய்யாக்கண்ணு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அய்யாக்கண்ணு சார்பில் வழக்கறிஞர் மணி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.