
சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்த்து யார் மூச்சு விட்டாலும் உடனே அரெஸ்ட் தான் என கடந்த சில தினங்களாக ஆக்ஷனில் குதித்துள்ளது மாநில அரசு.
சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்தும், அதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது குறித்தும் விவாதிப்பதற்காக திருவண்ணாமலையில் கூட்டப்பட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதலில் அனுமதி மறுத்த போலீசார், பிறகு அந்தக் கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை கைது செய்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்தக் கூட்டத்துக்கு திட்டமிட்டது. போலீசார் கெடுபிடியால் திருமண மண்டபங்கள் இந்தக் கூட்டத்துக்கு இடம் தர மறுத்ததாகவும், பிறகு திருவண்ணாமலை அருகே உள்ள வட ஆண்டாப்பட்டில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் இந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறுகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார்.
கூட்டம் ரைஸ் மில் வளாகத்துக்குள் உள்ளரங்கக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டதால் போலீசிடம் அனுமதி எதையும் பெறவில்லை என்று கூறிய அவர், அந்த ரைஸ்மில்லுக்குள் பந்தல் அமைத்தவர்களை போலீசார் தடுத்ததாகவும் கூறுகிறார்.
உள்ளரங்கக் கூட்டம் என்பதால் போலீசாரிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், எஸ்.பலராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கூட்டம், வேலூர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்துக்கு இடம் மாற்றப்பட்டது. இதையடுத்து, அங்கு வரத் தொடங்கிய விவசாயிகள் பலர் அலுவலகம் இருக்கும் தெரு முனையிலேயே கைது செய்யப்பட்டனர்.