
சேலம்
சேலத்தில் மக்காளச்சோளப் பயிர்களை சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த விவசாயி மயில்களை விஷம் வைத்து கொன்றதால் வனத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூர் பகுதியில் தேசியப் பறவையான மயில்கள் அதிகளவில் தஞ்சம் அடைந்துள்ளன. அவை அப்பகுதியில் உள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதால் அவற்றை விஷம் வைத்துக் கொல்கின்றனர் என்ற தகவல் ஆத்தூர் மாவட்ட வன அலுவலர் பெரியசாமிக்கு கிடைத்தது.
அதனையடுத்து, வாழப்பாடி வனச் சரகர் சந்திரசேகரன், சேசன்சாவடி வனவர் துரைமுருகன், வெள்ளாளகுண்டம் வனக் காப்பாளர் சின்னத்தம்பி ஆகியோர் அடங்கிய வனத் துறையினர் நேற்று சுற்றுப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பேளூர் பேரூராட்சியில் உள்ள மக்காச்சோளத் தோட்டத்தில் நான்கு மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதனையடுத்து, அந்த மயில்களை கைப்பற்றிய வனத் துறையினர், மயில்களை விஷம் வைத்துக் கொன்றதால் பேளூர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சின்னாக்கௌண்டர் மகன் செல்வராஜை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்தோஷிடம் சமர்ப்பித்து சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
வனவிலங்குகள் மற்றும் மயில்கள் உள்ளிட்ட பறவைகள் பயிர்களை சேதப்படுத்தினால், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவற்றை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதைவிடுத்து அவற்றைத் தாக்கினாலோ, உயிர் சேதத்தை ஏற்படுத்தினாலோ வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.