
கோவை பஞ்சு வியாபாரி வீட்டுக்கு, வருமான வரி அதிகாரிகள் எனக் கூறி, காரில் வந்த 12 பேர், அங்கிருந்த லாக்கரை அபேஸ் செய்துவிட்டு சென்றனர். அதில் 150 சவரன் நகைகளும் ரூ.40 லட்சமும் இருந்ததாக கூறப்படுகிறது.
கோவை சிங்காநல்லூர் அடுத்த ராமானுஜம் நகரை சேர்ந்தவர் பஷீர் (53). பஞ்சு வியாபாரி. நேற்று அதிகாலை 6 மணி அளவில் இரு கார்களில், டிப்டாப் ஆசாமிகள் 12 பேர், பஷீர் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த பஷீரிடம், ‘நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். வீட்டை சோதனையிட வந்துள்ளோம்’ என கூறியுள்ளனர்.
இதைகேட்டு அதிச்சியடைந்த அவர், அந்த ஆசாமிகளை வீட்டுக்குள் அனுமதித்தார். உள்ளே சென்ற மர்மநபர்கள், பஷீரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை ஒரு அறையில் அடைத்து, ளிப்புறமாக கதவை தாழிட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த செல்போன்களை பறித்து கொண்டனர்.
பின்னர் பஷீரிடம் கணக்கு வழக்குகளை கேட்டனர். உடனே அவர், வருமான வரி கணக்கு விபரங்கள் அடங்கிய பைல்களை காண்பித்து விளக்கம் அளித்தார். லாக்கரை சோதனையிட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, பணம் மற்றும் நகை வைத்துள்ள லாக்கரை, பஷீர் காண்பித்தார். உடனே மர்மநபர்கள், லாக்கரை அப்படியே எடுத்து காரில் ஏற்றினர். பின்னர், நகை, பணத்துக்கான விளக்கத்தை, அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது, உங்கள் லாக்கரை ஒப்படைக்கிறோம் என கூறிய அவர்கள், பஷீரையும் காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
அவிநாசி சாலையில் நீலம்பூர் அருகே திடீரென காரை நிறுத்திய கும்பல், பஷீரை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி கீழே இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்றது. அதன் பிறகே வந்தவர்கள் போலி வருமான வரி துறை அதிகாரிகள் என அவர் உணர்ந்து, அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கால்டாக்சி மூலம் சிங்காநல்லூர் காவல் நிலையம் சென்று, புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி, நகை, பணத்தை அபேஸ் செய்த டுபாக்கூர் ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
கொள்ளையர்கள் அபகரித்துச் சென்ற லாக்கரில் 150 சவரன் நகைகளும் 40 லட்சம் ரூபாய் ரொக்கமும் இருந்ததாக பஷீர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவினாசி சாலையில் உள்ள சிக்னல்களில் கொள்ளையர்களின் கார்கள் பதிவாகியுள்ளதா என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.