
காவேரிப்பட்டணம் அருகே போதிய கட்டிட வசதி இல்லாததால் சமுதாய கூடம் மற்றும் பள்ளி வராண்டாவில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
காவேரிப்பட்டணம் அருகே குண்டல்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 2003ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது.
இங்கு குண்டல்பட்டி, குட்டூர், குரும்பட்டி, மேல்கொட்டாய், கீழ்கொட்டாய், குள்ளநரிச்சான்கொட்டாய், சவுளூர், மாட்டுவாயன்கொட்டாய், மலையனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மாணவ, மாணவிகள் 135 பேர் பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆன நிலையில், போதிய இடவசதி இல்லாததால் அருகில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் பள்ளி வராண்டாவில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.
சமுதாய கூடத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, மாணவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அப்போது மாணவர்கள் உட்காருவதற்கு கூட இடம் இல்லாமல் மரத்தடியிலும், பள்ளி வராண்டாவிலும்பாடம் படிக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும், பள்ளியில் கழிப்பறை வசதியும் இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள வயல்வெளிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இயற்கை உபாதைக்காக வயல்வெளிக்கு சென்ற ஒரு மாணவியை பாம்பு கடித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த மாணவிக்கு உடனடியாக சிகிச்சை அளித்து ஆசிரியர்கள் காப்பாற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பிரச்னைக்கும் இடையில், இப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்த கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பள்ளிக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து அப்போதைய தொகுதி எம்எல்ஏவும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான கே.பி.முனுசாமியிடம் பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து, ஒரு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, அதில் மோட்டார் இணைப்பு கொடுத்துள்ளார். அதில் இருந்து தான் தற்போது மாணவர்கள் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு உடனடியாக சொந்த கட்டிடம் கட்ட, பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
முன்பு இந்த பள்ளியில் 250 மாணவர்கள் படித்தனர் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், தற்போது 135 மாணவ, மாணவிகள் மட்டுமே படிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் இந்த பள்ளியை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே, உடனடியாக பள்ளிக்கு தேவையான இடவசதியை ஏற்படுத்தி கொடுப்பதுடன், போதுமான கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.