
பெரம்பலூர்
பெரம்பலூரில் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள நவம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கால அவகாசம் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தகுதியுடைய நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை தங்கள் பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.
மேலும், நவம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விடுபட்ட நபர்களைக் கண்டறிந்து விண்ணப்பங்களை அளித்து பெற உள்ளனர்.
மேலும், சிறப்பு சுருக்க திருத்த காலத்தில் விடுபட்ட புதிய வாக்காளர்களின் பெயர் மற்றும் இதற்கு முந்தைய சிறப்பு சுருக்கத் திருத்தத்தில் விடுபட்ட வாக்காளர்களுக்கு படிவம் 6 வழங்குதல், 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களிடம் படிவம் 6 பெறுதல், வாக்காளர் பட்டியல் சேகரித்தல், உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் தகவல்களைப் பெறுதல் உள்ளிட்ட பணிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.