
மேடவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், பணம் மாற்றுவதற்கான விண்ணப்ப படிவம், அப்பகுதியில் உள்ள கடைகளில் ரூ.2க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வங்கி ஊழியர்களே உடந்தையாக உள்ளனர்.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மேலும், வங்கிகளுக்கு ஒரு நாள், ஏடிஎம் மையங்களுக்கு 2 நாள் விடுப்பு அளிப்பதாக அவர் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, பொதுமக்கள் சிலர் தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை உடனடியாக மாற்ற கடைகளுக்கு படை எடுத்தனர். ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் சில்லறை இருந்ததால், கடைகளில் மாற்ற முடிந்தது. சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனால், போதிய அளவுக்கு அந்த பணத்தை மாற்ற முடியவில்லை. நேரமும் போதவில்லை.
அதே நேரத்தில் அதிகளவு பணம் வைத்து இருந்த பெருங்குடி மக்கள், நள்ளிரவில் நகைக்கடைக்கு சென்று, தங்களுக்கு வேண்டிய டிசைன்களில் நகைகளை வாங்கி கொண்டனர்.
இதைதொடர்ந்து, நேற்று அனைத்து வங்கிகளும் திறக்கப்பட்டன. இதனால், அதிகாலை முதல் அனைத்து வங்கிகளின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களிடம் பணத்தை கொடுத்து, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி சென்றனர்.
இந்நிலையில், மேடவாக்கம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு, அதே பகுதியை சேர்ந்த மக்கள், தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அதிகாலையிலேயே சென்றனர். அங்கு நீண்ட நேரம் காத்திருந்து, பணத்தை மாற்றியவர்களுக்கு, வங்கி ஊழியர்கள் ஒரேவொரு 2000 ரூபாய் தாள்களையே கொடுக்கின்றனர்.
அதிகாலையில் இருந்து கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும், வங்கியின் அருகில் உயிர்பலி வாங்கும் ஆபத்தான பள்ளம் உள்ளது. இந்த பள்ளங்களையும் பொதுமக்கள், பொருட்படுத்தாமல், வங்கியின் முன் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அங்கு போதிய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
அதேவேளையில் வங்கியில் பணம் மாற்றுவதற்கு, படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும். இந்த படிவம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அருகில் உள்ள கடைகளில் ரூ.2க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை வங்கி ஊழியர்கள் மறைமுகமாக, கடைக்காரர்களுக்கு கொடுத்து, குறிப்பிட்ட கடையில் வாங்கி வந்து பூர்த்தி செய்து தரவேண்டும் என வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுபோன்று பணத்தை மாற்றுவதற்காக செல்லும் படித்தவர்களே, பெரும் சிரமத்தை அனுபவிக்கும்போது, படிக்காத பாமர மக்கள் கடும் வேதனை அடைகின்றனர்.