
தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலையில் இருந்த, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி கூறியதாவது:-
இடைத் தேர்தல் என்பது, சம்பந்தப்பட்ட தொகுதியில் 6 மாதத்துக்கு நடத்த வேண்டும். இந்த தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்றால், தேர்தல் அதிகாரிகள் மட்டும் வேலை பார்த்தால், போதாது. தேர்தலில் போட்டியிடும் கட்சியினரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
தமிழகத்தில் 3வது முறையாக இதுபோன்று தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாதாரண இடைத் தேர்தலுக்கே பல கோடி பணம் செலவு செய்தால், பெரிய தேர்தலுக்கு எவ்வளவு செய்வார்கள் என யோசிக்கவே முடியவில்லை.
இதை பார்க்கும்போது மற்ற மாநிலங்கங்கள் நம்மை என்ன கேள்வி கேட்கும். இவ்வளவு கேவலமான முறையை அரசியல் கட்சியினர் கையாண்டுள்ளனர். இது தமிழகத்துக்கு மானக்கேடான விஷயம்.
இடைத் தேர்தலுக்காக பறக்கும்படை, கண்காணிப்பு குழு, நுண்ணறிவு குழு, மத்திய பாதுகாப்பு படை என 200க்கு மேற்பட்டோர் வேலை செய்தும், பல கோடி கைமாறியுள்ளது. அதிலும், ஒரு அமைச்சரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கேவலமாக உள்ளது.
ஜனநாயகத்துக்கு முறைகேடாக நடந்து கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு பணம் கொடுத்தால், பொதுமக்கள் வாங்குவார்கள் என தெரிந்தே, வினியோகம் செய்துள்ளனர். இதை தடுக்க முடியாத சூழ்நிலையை அரசியல் கட்சியினர் உருவாக்கிவிட்டனர். தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் தலைவிரித்தாடுவது இதில் இருந்தே தெரிந்துவிட்டது.
நாடு முழுவதும் உள்ள மற்ற மாநிலங்கள், தமிழகத்தை எப்படி மதிப்பார்கள். என்ன சொல்வார்கள். இதற்கு, அரசியல்கட்சியினரே முழு காரணம். 80 சதவீதம் மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.