
தஞ்சாவூர்
சர்வாதிகார மனப்பான்மை கொண்ட மன்னர்கள் கூட மனிதர்களின் உணவு விஷயத்தில் தலையிடவில்லை. மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மோடியின் சட்டம் மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களை மட்டுமல்ல, விவசாயிகளையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், “கும்பகோணத்தில் எனது உருவப் பொம்மையை எரித்துள்ளனர். உருவப் பொம்மையை எரித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். எனக்கு ஆயுள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எனது உருவப் பொம்மையை எரித்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மோடி அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது. மாட்டு இறைச்சி என்பது பொதுவான உணவாக இந்தியா முழுவதும் இருக்கிறது. அந்த மாட்டு இறைச்சியை சாப்பிடக்கூடாது. மாட்டை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டு வருவது கொடுங்கோல் ஆட்சியில் கூட இருக்காது. சர்வாதிகார மனப்பான்மை கொண்ட மன்னர்கள் கூட மனிதர்களின் உணவு விஷயத்தில் தலையிடவில்லை.
இந்தச் சட்டம் மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களை மட்டும் பாதிக்காது. விவசாயிகளையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். இது நாட்டின் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் அவர்களாவே முன்வந்து போராட்டத்தை நடத்துவார்கள்.
பாலில் கலப்படம் என்பது ஜெயலலிதா ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்த விவகாரம். அதை ஆரம்பித்து வைத்தவர் அப்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்தான். ஆகவே முதலில் தமிழக அரசு கொடுக்கின்ற ஆவின்பால் தரம் மிகுந்ததா? மக்களின் உயிருக்கு பாதுகாப்பானதா? என்பதை தகுந்த நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும்.
தனியார் பால் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் பணம் வாங்கி இருக்கிறார் என்று சொல்லவில்லை. பணம் வாங்க வேண்டும் என்பதற்காக தான் தனியார் நிறுவன பாலில் விஷம் கலந்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
ஆறு ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சாதனை எதுவும் இல்லை. 100 நாள் சாதனை என்பது வேதனை மட்டும்தான். அவர்களுக்கு மோடியின் காலில் விழுவதற்கே நேரம் போதவில்லை.
பா.ஜ.க.வின் பினாமி கட்சியா? அ.தி.மு.க. என்ற கேள்வி எழுகிறது. பா.ஜனதாவின் பினாமி கட்சியா? அல்லது எடுபிடி கட்சியா? என்பது விரைவில் வெளியாகும்.
ரஜினிகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர். எல்லா கட்சியினரும் அவரை மதிக்கின்றனர். இந்த நேரத்தில் தனியாக கட்சியை ஆரம்பித்து தன்னை சிறிய வட்டத்திற்குள் முடக்கி விடக்கூடாது என்பது எனது கருத்து. ரஜினிகாந்தை பா.ஜனதா தலைவர் அமித்ஷா சந்திப்பதில் தவறு எதுவும் கிடையாது.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் வேட்பாளரை பா.ஜனதா ஆதரிக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத நேரத்தில் தூர்வாரினால்தான் பயன் அளிக்கும். இப்போது தண்ணீர் வந்து கொண்டு இருக்கிற நேரத்தில் தூர்வாரினால் எந்த பயனும் இல்லை. அனாவசியமாக அரசாங்கத்தின் பணம் வீணாகிவிடும்.
டாஸ்மாக் சாராயக் கடைகளை எல்லா இடத்திலும் முழுமையாக எடுத்துவிட வேண்டும். அது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள காவல் நிலையங்களில் டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை என்பது கண்துடைப்பா? அல்லது உண்மையாகவே நடந்ததா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் விளக்க வேண்டும்.
கருணாநிதிக்கு எடுக்கப்படும் சட்டசபை வைரவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதுபோன்ற பல விழாக்களுக்கு பொருத்தமானவர். அவர் கால்பதித்த எல்லா துறைகளிலும் சாதனைமிக்கவராக தனித்துவம் பெற்று இருக்கிறார். ஆகவே கருணாநிதிக்கு வைரவிழா கொண்டாடப்படுவது சாலச் சிறந்தது” என்று அவர் கூறினார்.