திரும்பிக் கூட பார்க்காத மக்கள்; நாய்களுக்கு அடைக்கலம் தரும் ஏ.டி.எம்கள்…

First Published Dec 21, 2016, 10:49 AM IST
Highlights


பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பப்படாமல் வெற்று இயந்திரங்களாக இருக்கும் ஏ.டி.எம் மையங்களை மக்கள் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஆனால், அந்த ஏ.டி.எம் மையங்கள் அனைத்தும், மார்கழி மாதத்தில் நாய்களுக்கு அடைக்கலம் தருகின்றன.

போளூரில் பல்வேறு வங்கிகளின் 14 ஏடிஎம் மையங்கள் உள்ள நிலையில், இவற்றில் பெரும்பாலானவை பணம் இல்லாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அவசரத் தேவைக்குக்கூட பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

18 வார்டுகளைக் கொண்டது போளூர் பேரூராட்சி. இந்தப் பேரூராட்சியில் சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு, ஆயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் தங்கி, பணிபுரிகின்றனர். மேலும், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், அரசு, தனியார் அலுவலகங்கள் அமைந்துள்ளன. போளூரைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.

போளூர் மற்றும் போளூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்காக இங்கு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 4 ஏடிஎம் மையங்கள், கரூர் வைசியா வங்கி சார்பில் 3 ஏடிஎம் மையங்கள், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் தலா ஒரு ஏடிஎம் மையம் உள்பட பல்வேறு அரசு, தனியார் வங்கிகள் சார்பில் 14 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இதில், ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட 3 அல்லது 4 ஏடிஎம் மையங்களில் மட்டுமே  சுழற்சி முறையில் பணம் நிரப்பப்படுகிறது. அப்படி நிரப்பப்படும் பணமும் சில மணி நேரங்களிலேயே தீர்ந்துவிடுகிறது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ஆம் தேதி இரவு மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, போளூரில் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் வங்கிகள் முறையாக பணம் நிரப்பப்படுவதில்லை என புகார்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தங்களின் அன்றாட செலவுக்குக்கூட பணம் எடுக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். 

எனவே, போளூரில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பணம் நிரப்ப வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பணம் நிரப்பப்படாமல் அனைத்து ஏ.டி.எம்களும் அருங்காட்சியத்தில் வைக்கப்பட வேண்டியவை என மக்கள் கேலி செய்து நகர்கின்றனர். மறுபுறம், பணம் இல்லாத ஏ.டி.எம்களை மக்கள் கண்டு கொள்ளாததால், மார்கழி மாதத்தில் கடும் குளிரில் நாய்களுக்கு அடைக்கலம் தருகிறது ஏ.டி.எம் மையங்கள்.

click me!