
தருமபுரி
ஈவ்டீசிங் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாணவிகள் புகார் தெரிவிக்க காவல் நிலையம் வரத் தேவையில்லை என்றும், புகார் தெரிவிக்க வசதியாக தர்மபுரி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள புகார் பெட்டிகளின் மனுக்களை போட்டாலே போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தர்மபுரி நகர காவலாளர்கள் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி, கிண்டல் செய்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தல், இளம் வயது திருமணம் போன்ற செயல்களை தடுக்க காவல்துறை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய செயல்பாடுகளால் பாதிப்பிற்குள்ளாகும் மாணவிகள் தங்கள் பிரச்சனை குறித்து காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று புகார் அளிக்க தயங்கும் நிலை இங்கு பரவலாக உள்ளது.
பள்ளி மாணவிகள் இத்தகைய பிரச்சனைகளை காவலாளர்களுக்கு தெரிவிக்க வசதியாக தர்மபுரி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புகார் பெட்டிகளை வைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி தலைமை வகித்தார். நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி இரண்டு புகார் பெட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியை தெரசாவிடம் கொடுத்தார்.
இந்த புகார் பெட்டிகள் குறித்து காவலாளர்கள் தரப்பில் கூறியது:
"பள்ளி மாணவிகள் ‘ஈவ்டீசிங்’ பிரச்சனைகள் குறித்த விவரங்களை விளக்கி மனுக்களாக எழுதி இந்த புகார் பெட்டியில் போடலாம். புகார் மனுக்களை எழுதும் மாணவிகள் தங்கள் பெயரை குறிப்பிட்டோ, குறிப்பிடாமலோ விவரங்களை தெரிவிக்கலாம்.
வாரத்திற்கு ஒரு முறை இந்த புகார்பெட்டியில் உள்ள புகார் மனுக்கள் எடுக்கப்பட்டு அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும். புகார் தெரிவித்த மாணவிகளின் பெயர் எந்த சூழலிலும் வெளியிடப்படாமல் இரகசியமாக பாதுகாக்கப்படும்" என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிகள் ஆய்வாளர் சீனிவாசன், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமாக பங்கேற்றனர்.