
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு பெற்றார். பின்னர் திருமகன் ஈவெரா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
பின்னர் 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் வற்புறுத்தலின் பேரில் திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் போட்டியிட்டு சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதான அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் தெரியுமா?
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படுமா? அல்லது ஆளுங்கட்சியான திமுக போட்டியிடுமா? என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முதல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு விட்டுக்கொடுத்தது. இந்த இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதேபோல் விஜய்யின் தவெக கட்சியும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியானது. களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்களிக்க ஆர்வத்துடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அடங்கிய 33 வார்டுகளில் உள்ள 53 வாக்குப்பதிவு மையங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,09,636 ஆண் வாக்காளர்களும், 1,16,760 பெண் வாக்காளர்களும், 37- மூன்றாம் பாலினத்தவர்களும் என 2,26,433 வாக்காளர்கள் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: காலையிலேயே பொதுமக்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி! பால் விலை மீண்டும் உயர்வு!
இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கும், திமுகவுக்கும் நேரடி போட்டி நிலவி வரும் நிலையில் அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஓட்டுக்கள் சீமானுக்கு செல்லுமா? அல்லது ஆளுங்கட்சியான திமுக செல்லுமா? என்பதை வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். எப்படி இருந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றாலும் எவ்வளவு வித்தியாசம் என்பதை பார்க்க வேண்டும்.