
பாமக நிறுவனர் ராமதாஸ் இதயம் சார்ந்த பிரச்சனைக்கு பரிசோதனை செய்வதற்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை, ''ராமதாஸ்க்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு பரிசோதனை முடிந்தவுடன் அவர் வீடு திரும்புவார்'' என்று கூறியிருந்தது.
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமதாஸை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். ''தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்பிற்குரிய மருத்துவர் ராமதாஸ்அய்யா அவர்களைச் சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்'' என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் மருத்துவர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இபிஎஸ் சென்றதும் ராமதாஸ் அவரை புன்னகை மலர வரவேற்றார்.
கையை பிடித்து அருகில் அருகில் அமர வைத்த ராமதாஸ்
தொடர்ந்து இபிஎஸ் நின்றபோது சட்டென்று அவரது கையை பிடித்த ராமதாஸ், ''உட்கார்.. உட்கார்..' என்று கூறி இபிஎஸ்ஸை தனது அருகில் அமர வைத்தார். இதன்பிறகு மருத்துவர்களிடம் ராமதாஸ் உடல்நிலை குறித்து கேட்டறிந்த இபிஎஸ், முகத்தில் புன்னகை ததும்ப ராமதாஸிடமும் நலம் விசாரித்தார். அப்போது ராமதாஸ், ''12 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் சிகிச்சை மேற்கொண்டேன். இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதனை செய்வதற்காக நானாக வந்தேன்'' என்று இபிஎஸ்ஸிடம் கூறினார். பின்பு இருவரும் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.
ராமதாஸ் மீதான அன்பின் வெளிப்பாடு
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் முதல் ஆளாக ஓடோடி வந்து அவரை பார்த்தார். இப்போது எதிர்க்கட்சித் தலைவரும் உடனடியாக வந்து ராமதாஸிடம் நலம் விசாரித்துள்ளார். இது ராமதாஸ் மீதான அரசியல் தலைவர்களின் அன்பை வெளிக்காட்டுகிறது என்று பாமகவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.