அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எதிர்க்கட்சிகள் 'யார் அந்த சார்' எனக் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஞானசேகரன் என்பவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த வாக்குமூலத்தில் ஞானசேகரன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த சமயத்தில் யாரோ ஒருவரிடம் பேசியதாக தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த சார் உடன் ஒன்றாக இருக்க வேண்டும் என கூறியதாகவும் மாணவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அப்படி சார் என்ற யாரும் இல்லையெனவும், மாணவியை மிரட்டுவதற்காகவே ஞானசேகரன் அப்படி கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் போராட்டம்
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத எதிர்கட்சிகள் யார் அந்த சார் என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சட்டப்பேரவையிலும் அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அவை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் உட்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் யார் அந்த சார் ? எனும் பேட்ஜ் அணிந்து பேரவை நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர்.
விவாதிக்க இபிஎஸ் கோரிக்கை
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும், விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டப்பேரவை விதி 56 இன் கீழ், அவை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே போல் இந்தியாவில் வேகமாக பரவி வரும் Hmvp வைரஸ் தொற்று பரவல் குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்துள்ளார்.