
திருநெல்வேலி
குற்றாலத்தில் தேர்வில் தோல்வியடைந்ததால் பொறியியல் படித்த இளைஞர் வீட்டில் சேலையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள ராயர் தோப்பு குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அழகையா. இவர் கடையத்தில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி கீழப்பாவூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுடைய மகன் ஜோதி ராஜபிரபு (22). வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு பொறியியல் படித்து முடித்தார். ஆனால் சில பாடங்களில் தேர்வாகவில்லை.
இதனால் படித்த படிப்புக்கான வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த ஜோதி ராஜபிரபு கடந்த சில நாள்களாக மிகுந்த வேதனையுடன் இருந்தாராம். நேற்று முன்தினம் இவரது பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. ஒரு அறையின் மேற்கூரையில் ஜோதி ராஜபிரபு சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கில் பிணமாக தொங்கிய ஜோதி ராஜபிரபுவை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து குற்றாலம் காவல் உதவி ஆய்வாளர் தனுஷ்கோடி வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்து போன ஜோதி ராஜபிரபு கல்லூரி நோட்டு புத்தகத்தில் தான் தோல்வி அடைந்த பாடங்களை எழுதி “சாரி மம்மி, டாடி” என்று எழுதியுள்ளார். அவரது உடல் தென்காசி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது பெற்றோர்கலிடம் ஒப்படைக்கப்பட்டது.