
நீலகிரி
நெலாக்கோட்டையில் நள்ளிரவில் வீட்டுக்குள் யானைக் கூட்டம் புகுந்ததால் வீடு சேதமடைந்து தரைமட்டமானது. இதில், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டையில் உள்ளது விலங்கூர் கிராமம். இங்கு புதன்கிழமை நள்ளிரவு யானைக் கூட்டம் புகுந்தது. அப்போது, பிரபாகரன் என்பவரின் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தது.
இதில், வீடு தரைமட்டமானது. இதனால், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் மனைவி ஓமணா, மகன் பிரவீன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு, கேரள மாநிலம், சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், நேற்றுக் காலை பிதர்க்காடு வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பிற்காக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நள்ளிரவில் யானைக் கூட்டம் புகுந்து, வீட்டை தரைமட்டமாக்கியதாலும், இருவர் பலத்த காயமடைந்த சம்பவத்தாலும் அப்பகுதியில் மக்கள் பதட்டத்துடன் இருக்கின்றனர்.