
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணகிரி அருகே வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சிறுத்தை, நரி, கரடி, மான், முயல், பாம்புகள் என பல்வேறு விலங்குகள் உள்ளன. இங்குள்ள விலங்குகள் குடிப்பதற்காக காட்டின் மையப் பகுதியில் நீர்த் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், காட்டில் உள்ள மான்கள், முயல்கள் தண்ணீர் தேடி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி ஊடேதுர்க்கம் அருகே உல்லட்டி பகுதிக்கு காட்டில் இருந்து ஒரு பெண் யானை, இன்று அதிகாலையில் வந்தது. அப்போது, தண்ணீருக்காக அங்கிருந்த கிணற்றின் அருகில் சென்றது. அப்போது, மணி சரிவு ஏற்பட்டு, 30 அடி கிணற்றில் அந்த யானை விழுந்தது.
யானையின் அலறல் சத்தம் கேட்டு, கிராம மக்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
தகவலறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு கிணற்றில் விழுந்த யானையை மீட்க கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை மீட்க முடியவில்லை. மேலும், தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் மீட்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.