மின்வாரியத்தால் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு முடிவுகட்ட தீர்மானம்…

First Published Nov 28, 2016, 10:33 AM IST
Highlights


திருப்பூர்,

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரிய நிர்வாகத்தால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு முடிவு கட்ட தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது என்று தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் மத்திய சங்கத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்டக்கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டம் தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.சுவாமிநாதன் தலைமையில் நடந்தது.

“மின்வாரியம் மற்றும் மின்வாரியத்திற்கு உட்பட்ட அனல் மின்நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். பணியின்போது விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

இவற்றை வழங்காத மின்வாரியத்தை வன்மையாகக் கண்டிப்பது; ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரிய நிர்வாகத்தால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு முடிவு கட்ட தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது” என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தே.மு.தி.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.குழந்தைவேல், தொழிற்சங்கத்தின் பொருளாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மின் பகிர்மான வட்டக்கிளை திட்ட செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார்.

தே.மு.தி.க. பகுதி நிர்வாகிகள் செல்வக்குமார், கண்ணன், பொன்னாசாமி, சரவணக்குமார், மணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

click me!