தினக் கூலியை உயர்த்தி கேட்டு மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டம்...

First Published Jun 20, 2018, 1:03 PM IST
Highlights
electricity contract workers held in hunger strike with the family


நாகப்பட்டினம்

தினக் கூலியை உயர்த்தி கேட்டு நாகப்பட்டினத்தில் மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு மின்சார வாரிய நாகப்பட்டினம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் சிவராஜன் தலைமை வகித்தார். 

இதற்கு திட்டச் செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.  திட்டப் பொருளாளர் செந்தில்குமார் வரவேற்றார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி.மணி, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், "தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கடந்த 26.12.2016 அன்று சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியின் படி ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு உடனே நிரந்தரம் செய்ய வேண்டும்.

மின்துறை அமைச்சர் 22.2.2018 அன்று அறிவித்த ரூ.380 தினக்கூலியை அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் உடனே வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பெரியசாமி, சி.ஐ.டி.யூ. நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட பொருளாளர் சிவனருட்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். 

போராட்டத்தின் இறுதியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த மணிமேகலன் நன்றி தெரிவித்தார். 
 

click me!