
சென்னை, கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி சிறுமிகள் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மின்சார துறையும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை, கொடுங்கையூரில் மின் பெட்டியில் இருந்து வெளிவந்து அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பாவனா, யுவஸ்ரீ என்ற 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின் வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. மின் பெட்டிகளை முறையாக கண்காணிக்காமலும், புகாரை கருத்தில் கொள்ளாமலும் வியாசர்பாடி மின்வாரிய ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளும் 5 மின்வாரிய ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிறுமிகள் இறந்த சம்பவம் அடங்குவதற்கு, தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை, பூந்தமல்லி அருகே சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லியில், வீட்டின் மொட்டை மாடியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். மழை காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால், சிறுவர்கள் ஒன்றாக விளையாடி வந்துள்ளனர். அப்போது மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் முகமது மிராஜ் மற்றும் முகமது வாசிம், மொட்டை மாடியில் தாழ்வாக சென்ற மின் கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது. இதில், முகமது மிராஜ் தூக்கி வீசப்பட்டான். மின்சாரம் தாக்கியதில் முகமது மிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்றொரு சிறுவனான முகமது வாசிம், பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.