
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை புறநகர் ரெயில் சேவை 100 சதவீதம் இயங்க வில்லை. அதேபோல் ரெயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தெற்கு ரெயில்வே விதித்து இருந்தது. கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் இறங்கு முகம் கண்டு வருகிறது.
இதையடுத்து, தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அண்மையில் தெற்கு ரயில்வே தளர்த்தியது. இந்நிலையில், நாளை முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு விதித்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளும் திரும்ப பெற்றப்பட்டது.
இதை தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் அனைத்து வழித்தடங்களிலும், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட எண்ணிக்கையில் (14.02.2022) நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும். மேலும் சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, செங்கல்பட்டிற்கும், மறுமார்கத்திலும் ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.