
தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான வீடு, கடைகளுக்கு வாடகை பாக்கி வைத்திருப்போரின் கடைகள், வீடுகளுக்கு சீல் வைத்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சம் கட்டிடங்கள், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள், கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாடகைதாரர்கள் சிலர், முறையாக வாடகை மற்றும் குத்தகை தொகையை செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
மாறாக, அவர்கள் உள்வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் முறைப்படி வாடகை நிலுவைத் தொகையை முறைப்படி வசூலிக்காததால் சுமார் ரூ.2,530 கோடிக்கு மேல் வாடகை பாக்கியை வசூலிக்க முடியாத நிலை இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வாடகைதாரர்களிடம் இருந்து பாக்கி தொகையை வசூலிக்க உத்தரவிட்டார். மேலும், வாடகை பாக்கியை செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அவர்களை வெளியேற்றவும் ஆணையர் குமரகுருபரனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், கோயில் கடைகள், வீடுகளில் வாடகை பாக்கி தொகை வைத்திருப்போர் 15 நாட்களுக்குள் செலுத்தவும் நோட்டீஸ் அனுப்பபட்டன.
அதன் பேரில் மாநிலம் முழுவதும் வாடகை பாக்கி வைத்திருப்போரின் கடை, வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் கன்னிமார் கோயிலுக்கு சொந்தமான 3.61 ஏக்கர் நிலம், தொட்டியனூர் கிராமத்தில் உள்ள முட்டத்து ராயர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம், தத்தனூர் கிராமம் அடிபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 10.25 ஏக்கர் நிலம், கருவலூர் கிராமம் தர்மராஜா கோயிலுக்கு சொந்தமான 3.95 ஏக்கர் நிலம், தொட்டகாளம்புதூர் கிராமம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 7.32 ஏக்கர் நிலம் கோயில்களின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவிலுக்கு சொந்தமான கட்டடம் காமராஜர் சாலையில் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக வாடகை நிலவை தொகை ரூ.4,05,000 ஐ கேட்டு தர மறுத்ததால் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா மற்றும் அதிகாரிகள் அக்கடையை பூட்டி சீல் வைத்தனர்.மேலும் இதுவரை கோவில் சொத்துகளில் வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக செலுத்துமாறும், இல்லையெனில் இதுபோன்று நடவடிக்கைகள் தொடர இருப்பதாகவும் கோயில் செயல் அலுவலர் எச்சரித்துள்ளார்.