4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு முடிந்தது - 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

First Published Nov 19, 2016, 6:40 PM IST
Highlights


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 4 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக முடிந்தது.

தமிழ்நாட்டில் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் மறு தேர்தலும் திருப்பரங்குன்றம் மற்றும் புதுவையின் நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை மாலையுடன் முடிந்தது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவை ஒட்டி துணை ராணுவப்படையினர், பறக்கும் படையினர், காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

காலையிலிருந்தே தஞ்சையிலும் அரவக்குறிச்சியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதே போல் நெல்லித்தோப்பிலும் விறுவிறுப்பாக நடந்தது.

தஞ்சையில் அதிமுக சார்பில் ரங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி, பாஜக சார்பில் ராமலிங்கம், தேமுதிக சார்பில் அப்துல்லா சேட் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி, திமுக சார்பில் கே.சி.பழனிசாமி, பாஜக சார்பில் எஸ்.பிரபு, தேமுதிக சார்பில் முத்து உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் சரவணன், பாஜக சார்பில் ஸ்ரீனிவாசன், தேமுதிக சார்பில் தனபாண்டியன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

இதேபோல் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

புதுச்சேரி முதல்வரும் நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளருமான நாராயணசாமி வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களை பார்வையிட்டார். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் கூறினார். மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

 4 தொகுதிகளிலும் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. 5 மணி நிலவரப்படி
5.00 மணி  வரை பதிவான இறுதி நிலவரம்; அரவக்குறிச்சி - 81.92  %,  தஞ்சாவூர் - 69.02 %
திருப்பரங்குன்றம் - 70.19  % . வாக்குப்பதிவு முடிந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

4 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

click me!