
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்று தனி வார்டுக்கு மாற்றப்பட்டதை அடுத்து மகிழ்ச்சி அடைந்த தொண்டர்கள் சாலையில் இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் வகித்து வந்த இலாகாக்கள் நிதியமைச்சர் ஓபிஎஸ்சுக்கு மாற்றப்பட்டது.
முதல்வராக நீடித்த ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக அழைக்கப்பட்டார். அவருக்கு லண்டனிலிருந்து தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர் ரிச்சர்டு பேல் தலைமையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எய்ம்ஸிலிருந்தும் மருத்துவர்கள் வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் பூரண குணம் அடைந்து விட்டாலும் மேலும் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற நிலையில் முதல்வர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். இன்று காலையிலேயே முதல்வர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார் , டிஸ்சார்ஜ் ஆகிறார் என்றெல்லாம் ஹேஸ்யங்கள் கிளம்பின.
முதல்வர் சம்பந்தப்பட்ட சிகிச்சை கருவிகள் மற்ற பொருட்கள் ஒவ்வொன்றாக அதே தளத்தில் உள்ள மற்றொரு புறம் அமைந்துள்ள ‘’ A ‘’வார்டுக்கு எதிரில் உள்ள லேபர் வார்டுக்கு மாற்றப்பட்டது.
அந்த வார்டு நான்கு அறைகளை கொண்டது. அதை ஒரே வார்டாக மாற்றி , முதல்வர் இந்த வார்டில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பிற பயிற்சிகள் எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சரியாக 5.15 மணிக்கு முதல்வர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனை முன்பு குவிந்த தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பூசணிக்காயில் சூடம் ஏற்றி முதல்வர் இருந்த திசை நோக்கி ஆரத்தி எடுத்தனர். நேரம் செல்ல செல்ல தொண்டர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. சாலையிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை முழுதும் பரபரப்பாக காணப்பட்டது.