
கோவை மாவட்டத்தில் எட்டு எம்.எல்.ஏ.க்களை ஒரு வாரமாக காணவில்லை என்றும் அவர்களை தயவு செய்து கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் காவல் ஆணையரிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே யார் ஆட்சி அமைப்பது என்று கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இருதரப்பினரும் கட்சியில் தங்களுக்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தங்களது தொகுதி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்ககோரி வாக்காளர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பியும், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகர 52–வது வார்டு அ.தி.மு.க. துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் அவருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று மதியம் 2 மணியளவில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர்.
பின்னர் அவர்கள் ஆணையர் ஏ.அமல்ராஜை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
“கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 9 பேர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள், ஒருவர் தி.மு.க.வை சேர்ந்தவர். ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத்தான் கோவை மாவட்டத்தில் 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பொதுமக்கள் தேர்வு செய்தனர். வேறு யாரும் சொல்லி பொதுமக்கள் அவர்களை தேர்வு செய்யவில்லை.
எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் அவர்களுக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்து பயன்பெற்று வருகிறார்கள்.
கௌண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பன்னீர்செல்வத்துடன் இருக்கிறார். ஆனால் மீதி உள்ள 8 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கடந்த ஒரு வாரமாக காணவில்லை.
சட்டமன்ற தொகுதியில் இருக்கும் அலுவலகத்துக்கு சென்றாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவை அவர்களிடம் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
மேலும், அந்தந்த சட்டமன்ற தொகுதி அலுவலகங்களில் எழுதி போடப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும் ‘சுவிட்ச்–ஆப்’ செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த ஒருவாரமாக அவர்கள் 8 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றனர் என்பதும் தெரியவில்லை.
எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து, காணாமல்போன 8 எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை காணவில்லை என்று அ.தி.மு.க. நிர்வாகிகளே காவலில் மனு கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.