தமிழகத்தில் கல்வி முறையை மாற்ற வேண்டும் - ஆளுநர் ரவி!

By Manikanda PrabuFirst Published Jun 5, 2023, 4:44 PM IST
Highlights

தமிழகத்தில் கல்விமுறையை  மாற்ற வேண்டும் என ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ரவி, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு முறையான கல்வி அளிப்பது குறித்தும், நவீன சூழலுக்கு தேவையான கல்வி அளிப்பது தொடர்பாகவும் இந்த மாநாடு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தொழில்நுட்பம் வளர்ந்து வருவது உள்ளிட்ட காரணங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு படையெடுப்பதாக சுட்டிக்காட்டிய ஆளுநர் ரவி, நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றார். மாணவர்களை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு மெருகேற்றி கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. இதனால் குறைந்த ஊதியத்தில் மாணவர்கள் கிடைத்த வேலையை பார்க்கின்றனர். நவீன காலத்துக்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் மாணவர்களின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.” என்றார்.

தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனருக்கு ஆங்கில திறன் குறைப்பாடு உள்ளது எனவும் ஆளுநர் ரவி சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், “பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள். பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே  படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். இந்த பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.  மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். தாய் மொழியில் கற்பதை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளன என தெரிவித்த ஆளுநர் ரவி, தமிழகத்தில் கல்விமுறையை  மாற்ற வேண்டும். கல்வி முறையை இளைஞர்களின் திறன் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாட்டிலேயே சென்னை ஐஐடி தான் பெஸ்ட்! 5-வது முறையாக முதலிடம் பிடித்து அசத்தல்! முழுவிவரம் இதோ..

முன்னதாக, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலின்படி, பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில், சென்னை பிரசிடென்சி கல்லூரி (3ஆவது இடம்), கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கல்லூரி (4ஆவது இடம்), சென்னையில் உள்ள லயோலா கல்லூரி (7ஆவது இடம்) ஆகியவை முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!