
2026ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஒருபுறம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று குறிப்பிட்ட கட்சிகள் குரல் எழுப்ப, மறுபுறம் கூட்டணியை உருவாக்குவதிலும், கூட்டணியை தக்கவைப்பதிலும் அதிமுக, திமுக கவனம் செலுத்தி வருகிறது. இதனிடையே “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற வாசகத்தோடு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சுற்றுப்பயணத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக.வை ஆட்சிப் பொறுப்பில் அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு அதிமுக, பாஜக கூட்டணி செயல்பட்டு வருகிறது. இதே நோக்கத்தோடு வரும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை அதிமுக மேற்கொள்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு பெரிய கட்சி ஒன்று அதிமுக.வில் இணைய உள்ளது. அதன் பின்னர் ஒட்டுமொத்த 234 தொகுதிகளில் 210 தொகுதிகளை எங்கள் கூட்டணி கைப்பற்றும்” என்று புள்ளிவிரங்களுடன் பேசியது கவனம் பெற்றுள்ளது.
மேலும் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகமோ திமுக, பாஜக.வுடன் கூட்டணி கிடையாது என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது. அதே போன்று சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து தான் போட்டி என்பதை உறுதியாகத் தெரிவித்துவிட்டது. இதனால் அதிமுக, தவெக இடையே கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் எழுந்தன.
இந்நிலையில் பிரபல தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன்படி, “தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்ற கேள்விக்கு, தவெக.வுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவிக்காமல், தேர்தல் வியூகங்களை வெளியில் சொல்ல முடியாது என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் பாஜக கூட்டணியில் இருந்து விலகி தவெக.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அனுமானத்தில் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக, பாஜக, தவெக என இரண்டு கட்சிகளில் எந்த கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தால் பலம் என்ற கேள்விக்கு, “பாஜக ஒரு தேசிய கட்சி, பல மாநிலங்களில் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட பலம், பலவீனம் உள்ளது. எந்த கட்சியையும், பிற கட்சியுடன் ஒப்பிட்டு பேச முடியாது. திமுக.வை அகற்ற வேண்டும் என்ற கருத்தில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.