தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளரும், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மனோபாலா காலமானார்
பிரபல இயக்குனர் மற்றும் நடிருகருமான மனோபாலா உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்து வருகின்றனர். மனோபாலவின் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் திரு. மனோபாலா அவர்கள் 'ஆகாய கங்கை' என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கியதோடு, தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும், பல்வேறு திரைப்படங்களில் நடித்து, மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவரும், பழகுவதற்கு இனிமையானவருமான நடிகர் திரு. மனோபாலா அவர்கள்,
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு, தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளை நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையோடு பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து, சிறந்த முறையில் கழகப் பணிகளை ஆற்றியவர். தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும்.
அன்புச் சகோதரர் நடிகர் திரு. மனோபாலா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அருமை நண்பா என கலங்கிய ரஜினி... மனோபாலா மறைவுக்கு கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்