
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்று முடிந்தது. காலையில் தொடங்கிய மாநாடு மாலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சிறஒஉரையை அடுத்து நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாநாடு முடித்து வீடு திரும்பும் போது, சாலை விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அதிமுக மாநாட்டுக்கு சென்று வீடு திரும்பும் போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உயிரிழந்த 8 பேருக்கு தலா ரூ.6 லட்சம் கட்சியின் சார்பில் வழங்கப்படும் எனவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1,50,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நடிகர் சத்தியராஜ் பட்டத்தை பறித்த எடப்பாடி பழனிசாமி: அதிமுகவின் ‘புரட்சி’ பெயர்கள்!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து கொள்வதற்காக, கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த பொன்னுசாமி, சென்னையன், கதிரேசன், பழனிச்சாமி, மாரிமுத்து, வாசுதேவன், கடற்கரை மற்றும் சாம்பசிவம் ஆகிய 8 பேர் உயிரிழந்த செய்தி அறிந்தும், வாகனங்களில் செல்லும் போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டும் மிகவும் வேதனையடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் தலா 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அதே போல் வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக கழகத்தின் சார்பில் தலா 1,50,000 ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சாலைகளில் பயணம் செய்யும்போது, மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது நான் வலியுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற விரும்பத் தகாத விபத்துகள் நடைபெற்று, கழக உடன்பிறப்புகள் உயிரிழப்பதும், காயங்கள் அடைவதும், மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.” என்றும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.