வீழ்ச்சியை நோக்கி எடப்பாடி அணி… மதுரை இளைஞர் விழாவில்  காலியாக கிடந்த நாற்காலிகள்…

First Published May 6, 2017, 7:21 AM IST
Highlights
Edappadi Palanisamy meeting at Madurai


மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இளைஞர் விழாவில் பெருமளவு பொது மக்கள் கலந்து கொள்ளாததால் நாற்காலிகள் காலியாக கிடந்தன. இது எடப்பாடி அணிக்கான வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு அணிகளாக அதிமுக செயல்பட்டு வருகிறது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதையடுத்து, டி.டி.வி.தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் அவரும் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த அணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்த இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று அது தோல்வி அடைந்தது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மதுரையில் நடைபெற்றன. இதற்காக நேற்று பிற்பகல் 1.30-க்கு விமானம் மூலம் மதுரை வந்தார்

அவரை வரவேற்க மதுரையில் பல இடங்களில் மிகப் பிரமாண்டமான  பிளக்ஸ் பேனர்கள் என தடபுடலாக இருந்தது. ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்ததைப் போல செண்டை மேளம், பூரண கும்பம் என தொண்டர்கள் அசத்தினர்.    

இதைத் தொடர்ந்து ரிங் ரோடு பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில், இளைஞர்களுடனான கலந்துரையாடல் மற்றும் கலை நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், கூட்டம் சேர்ப்பதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.

அதற்காக, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் விதத்தில் வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை நடத்துவதாகவும், மாணவர்கள் அனைவரையும் அழைத்து வர வேண்டும் என்றும் அறிவித்தனர்.

ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. மைதானமும் நிரம்பவில்லை. ஏராளமான நாற்காலிகள் நிரம்பாமல் காலியாக கிடந்தன.

இதனால், அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களையும், பொது மக்களையும் தேடிப் பிடித்து அமர வைத்தனர்.

இதே போன்று எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிற நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கூட்டம் அதிகமில்லை. தொண்டர்கள் கலந்து கொள்ளாததால் எடப்பாடி அணிக்கு இது பெரிய வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது.

 

 

click me!