
தேனி
ஆண்டிப்பட்டியில் புதிதாக வைக்கப்பட்ட சாராயக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாராயக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நிரந்தரமாக கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று பெண்கள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளை வேறு பகுதிகளுக்கு மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால், புதிதாக சாராயக் கடைகள் அமைக்க மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிக்கின்றனர். இதனால் புதிய பகுதியில் சாராயக் கடை அமைப்பது என்பது அதிகாரிகளுக்கு குதிரைக் கொம்பாக இருக்கிறது.
இந்த நிலையில் ஆண்டிப்பட்டி – ஐயணத்தேவன்பட்டி சாலையில் புதிதாக அரசு சாராயக் கடை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த கடையை உடனடியாக மூடவேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைடை சூழ்ந்து கொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மேலும், சாராயக் கடையின் வாசலின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்ட ஆண்டிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் காவலாளர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், அங்க சுற்றி இங்க சுற்றி எங்கள் இடத்திலேயே சாராயக் கடை வைப்பதா? சாராயக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒற்றைக் கோரிக்கையை ஆணித்தனமாக மக்கள் கூறியதால் சாராயக் கடையை திறக்க வேண்டாம் என்று சாராயக் கடை ஊழியர்களிடம் காவலாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும், கடையை நிரந்தரமாக அகற்றும் வரையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று மக்கள் அறிவித்துள்ளனர்.
இப்படி புதிதாக சாராயக் கடை திறக்கப்படும் அனைத்து இடங்களிலுன் மக்கள் தடை போட்டு புரட்சி முழக்கத்தை எழுப்புகின்றனர்.