
தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க அரசுகளால் வழங்கப்பட்ட இலவசத் திட்டங்கள், குறைவான வரிவருவாய் வசூல், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட முடக்கம் ஆகியவற்றால் மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறையும், பொருளாதாரமும் அதாள பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளது.
மாற்றுத்திட்டம்?
இதனால், ஆளும் முதல்வர் எடப்பாடிதலைமையிலான அரசு என்ன மாற்றுத்திட்டம்வைத்திருக்கிறது என்பது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்வியாக அமைந்துள்ளது.
செலவு அதிகம்
கடந்த 2016-17ம் நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.15 ஆயிரத்து 850 கோடியாக உயர்ந்து, நாட்டிலேயே முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதாவது, வருவாயைக் காட்டிலும் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கூடுதலாக செலவு ஆகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 885 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒரு நேரத்தில்
ஒரு நேரத்தில் அதாவது கடந்த 2012-13ம் ஆண்டில் மாநிலத்தின் நிதிநிலைமை மிகவும் சிறப்பாக,கஜனாநிரம்பி இருந்தது. அதாவது, ஏறக்குறைய ரூ. ஆயிரத்து 760 கோடி உபரியாக இருந்தது.
67 சதவீதம் அதிகரிப்பு
ஆனால், 2013-14ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.1,790 கோடியாகவும், 2014-15ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 258 சதவீதமும், 2015-16ம் ஆண்டில் 47 சதவீதமும், 2016-17ம் ஆண்டில் 67 சதவீதமும் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து கடனில் தத்தளிக்கிறது.
ரத்தகண்ணீர்
இது குறித்து இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், “ தமிழகத்தின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாநிலத்தின் நலன் கருதி கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இலவச மின்சாரத் திட்டத்தால், ஏறக்குறைய மாநிலத்தின் மின்சாரத்துறையை கடனில் மூழ்கி, ரத்தக்கண்ணீர் வடிக்கிறது. ஒரு நேரத்தில் அதிக வருவாய் ஈட்டிய மின்சாரத்துறை இப்போது கடனில் சிக்கித்தவிக்கிறது. சாதாரண மக்களைக் காப்பதற்காக கொள்கையை அடமானம் வைக்க கூடாது.
செலவை குறையுங்கள்
மாநிலத்தின் நிதிநிலைமை என்பது ஒழுங்கற்ற முறையில் இருக்கிறது. ஆதலால், அது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அதாவது வருவாயைக் காட்டிலும் தொடர்ந்து செலவு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அவ்வாறு இல்லாமல் செலவை குறைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாநில அரசால் தொடர்ந்து கடன் வாங்கியே அரசு எந்திரத்தை நடத்திவிட முடியாது.
ஸ்திரமான நடவடிக்கை
நாட்டில் அதிகமான வருவாய் ஈட்டும் மாநிலமாக தமிழகம் இருந்தபோதிலும், அதாவது, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி சிறப்பாக இருந்தபோதிலும், தொடர்ந்து கடனில் சிக்கித் தவிக்கிறது. ஆதலால், அரசு தீவிரமான, ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருவாய் வெளியேறும் ஓட்டைகளை அடைக்க வேண்டும். ’’ என்றார்.
3-வது மோசமான இடம்
மேலும், ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, தமிழக்கத்தின் ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறை ரூ. 40 ஆயிரத்து 500 கோடியாக கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அதே சமயம், தமிழகத்தின் பொருளாதாரமும் வளர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அதிகமாக நிதிப்பற்றாக்குறை இருக்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பாஜனதா ஆளும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.
உ.பி. பராவாயில்லை
உத்தரப்பிரதேசம் அரசு கடந்த 2015-16ம் ஆண்டில் ரூ.64 ஆயிரத்து 330 கோடி நிதிப்பற்றாக்குறையில் இருந்தது. ஆனால், 2016-17ம் ஆண்டில் கொஞ்சம் முன்னேறி தனது நிதிப்பற்றாக்குறை அளவை ரூ. 49 ஆயிரத்து 960 கோடியாகக் குறைத்துள்ளது.
ஆனால், தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கடந்த 2014-15ம் ஆண்டு ரூ.32 ஆயிரத்து 300 கோடி யில் இருந்து கடந்த ஆண்டு வரை 54 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடனும் அதிகரித்தது
மேலும், தமிழக அரசு செலுத்த வேண்டிய கடன் தொகையும் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2012-13ம் ஆண்டில் 1.52 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2016-17ம் ஆண்டில் ரூ.2.56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 2006-07ம் ஆண்டில் மாநிலத்தின் கடன் என்பது வெறும் ரூ.17 ஆயிரத்து 257 கோடிதான். கடந்த 10 ஆண்டுகளில், மாநிலத்தின் கடன்தொகை என்பது 15 மடங்கு அதிகரித்துள்ளது.
ஏன் கடன்?
மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியும், வரிவருவாயும் கடந்த 5ஆண்டுகளாக 2 மடங்கு அதிகரித்த போதிலும் மாநிலம் கடனில் சிக்கித்தவிப்பது ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் வரிவருவாய் ரூ.90 ஆயிரத்து 690 கோடியாக உயர்ந்துள்ளது, 2016-17ம்ஆண்டில்உள்நாட்டு மொத்த உற்பத்தி ரூ.13.38 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த அளவுக்கு உயர்ந்து இருந்தும் ஏன் தமிழகம் தொடர்ந்து கடனில் சிக்கி இருக்கிறது என்பதற்கான காரணத்தை தமிழக அரசுதௌிவு படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
என்ன செய்யப்போகிறார்?
தமிழகத்தை மிகப்பெரிய கடன் புதை குழியில் இருந்து மீட்க, ஆளும் முதல்வர் எடப்பாடிதலைமையிலான அரசு ,என்ன மாற்றுத் திட்டம்வைத்திருக்கிறது ? என்பது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்வியாக அமைந்துள்ளது.