
மின் கட்டண விதிகள் தொடர்பாக மத்திய அரசு செய்த திருத்தங்களால் மின் கட்டணம் உயரக்கூடும் என்று தகவல் பரவிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. மேலும், இந்த சீர்திருத்தம் மின் கட்டணத்தை குறைப்பதற்கான மிகச்சிறந்த ஏற்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
நேரத்திற்கேற்ப மின் கட்டனம் நிர்ணயம் செய்யப்படும் முறையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் 2020-ல் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டதன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் ஏற்படும்.
அதன்படி, மின்சாரத்திற்கு அதிக தேவை இருக்கும் பீக் ஹவர்ஸில் (Peak hours) உதாரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி வரையிலும் மின் கட்டணம் வழக்கதை விட 10 முதல் 20% அதிகமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் சாதாரண நேரத்தில் மின் கட்டணம் 10 முதல் 20% வரை குறைவாக இருக்கும் என தகவல்கள் பரவின. 2024, ஏப்ரல் 1 முதல் மற்றும் தொழில்முறை நுகர்வோருக்கு இந்த கட்டண முறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்திய பிறகு, ஸ்மார்ட் மீட்டர் நுகர்வோருக்கு இந்த கட்டண முறை அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் மத்திய அரசின் திருத்தம் வீடுகளுக்கு பொருந்தாது என தமிழக மின்சாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கூட்டணம் கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது விதி. தமிழ்நாட்டில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது. தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி, உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே இந்த திருத்ததால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்தது.
இதனிடையே, பாஜக தமிழக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில், மின்துறை சீர்திருத்தம் குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளார். இந்த மின்துறை சீர்திருத்தம் மின் கட்டணத்தை குறைப்பதற்கான மிகச்சிறந்த ஏற்பாடு என்றும் தெரிவித்துள்ளார். இதை உணர்ந்து அனைவரும ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.