பிள்ளையார் சுழி போட்ட ஆண்டவர்...  தூர்வார களமிறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்...

First Published Oct 29, 2017, 1:44 PM IST
Highlights
DYFI members started cleaning process at Ennore area


சென்னை எண்ணூர் துறைமுக பகுதியில் கொசஸ்தலை ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். 

வடசென்னையில் எண்ணூர் கழிமுகப் பகுதியில் அனல்மின்நிலைய கழிவுகள் கொட்டப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நீண்ட காலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் கமல்ஹாசன் வடசென்னைக்கு ஆபத்து என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனையடுத்து தனது ரசிகர்களுக்கு கூட தெரிவிக்காமல் அதிகாலையிலேயே நேரில் சென்று எண்ணூர் கழிமுகப் பகுதியைப் பார்வையிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை கிளப்பியது.

கமல் களத்தில் இறங்கியதையடுத்து தமிழக மக்களின் பார்வை இந்தப் பகுதியின் மீது விழுந்தது. ஆண்டவரின் அதிரடி விசிட்டால் ஆடிப்போன 
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதற்கு கமலும் " தானே முன்வந்து ஆவன செய்ய வாக்குறுதி தந்த ஆட்சியர் சுந்தரவல்லியார்க்கு எண்ணூர் குப்பத்துமக்கள் நன்றியோடு என் நன்றியும் சேரும் என ட்விட்டரில் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார். 

இந்நிலையில் நடிகர் கமலின் வருகை எதிரொலியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எண்ணூர் கழிமுகப் பகுதியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு தூர்வாரும் பணியைத் தொடங்காத நிலையில் சுமார் 100 மாணவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு அந்தப் பகுதி மீனவர்கள் தூர் வார உதவி செய்துவருகின்றனர்.

click me!