
கடலோர மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், தென் மேற்கு வங்கக்கடலில் நேற்று மாலை நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டத்தின் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை ஒருவாரம் தாமதமாக தொடங்கினாலும் இந்த ஆண்டு அதிக மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.