பெரியார், மணியம்மையை பற்றி சர்ச்சை பேச்சு..! வருத்தம் தெரிவித்த துரைமுருகன் - நடந்தது என்ன.?

By Ajmal Khan  |  First Published Sep 22, 2023, 1:29 PM IST

என்னுடைய இந்த பேச்சு வீரமணி அவர்களுக்கும், தந்தை பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்று கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில் அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என துரை முருகன் தெரிவித்துள்ளார். 


பெரியார், மணியம்மை- துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு

பெரியார், மணியம்மை தொடர்பாக திமுக முப்பெரும் விழா மாநாட்டில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று அவர் அளித்துள்ள விளக்க அறிக்கையில்,  17.9.2023 அன்று வேலூரில் நடைபெற்ற கழகத்தின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில் நான் பேசும் போது, கழகத்திற்கும் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கும் இருந்த தொடர்புகளை குறித்து பேசிக் கொண்டு வரும்போது,

Tap to resize

Latest Videos

திமுக தோன்றியதற்கே காரணம் வேலூர் மாநகரம் தான் காரணம். வேலூருக்கு பிரச்சாரத்திற்கு வந்த தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையார் அவர்கள் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணியைப் பார்த்த தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையார் அவர்களை கழகப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார். 

திமுக மாநாட்டில் நடந்தது என்ன.?

எதிர் காலத்தில் கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்து விட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்து கொண்டார். இது பொருந்தா திருமணம் என்று அண்ணா அவர்கள் திராவிட கழகத்திலிருந்து வெளியேறினார். இது தான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம். இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், "தந்தை பெரிய.. அவர்கள் மணியம்மையார் அவர்களை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்” என்று சொல்ல வேண்டிய இடத்தில், "தந்தைப் பெரியார் அவர்கள் மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்" என்று பேசிவிட்டேன். “அழைத்துக் கொண்டு போனார்" என்பதற்கும் "கூட்டிக் கொண்டு போனார்” என்பதற்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.

வருத்தம் தெரிவித்த துரைமுருகன்

என்னுடைய இந்த பேச்சு தமிழினத் தலைவர் அண்ணன் வீரமணி அவர்களுக்கும், தந்தை பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்று கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில் அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் இடத்திலும், ஆசிரியர் அண்ணன் வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை அண்ணன் வீரமணியார் அவர்களே அறிவார்கள் என துரைமுருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மதுரை மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்கிய அதிமுக..! அதிர்ச்சியில் அண்ணாமலை

click me!