போலி ஆவணங்கள் மூலம் வங்கிக்கு ரூ.58 லட்சம் நஷ்டம் - மேலாளர் உள்பட 6 பேருக்கு கடுங்காவல்

Asianet News Tamil  
Published : Dec 09, 2016, 07:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
போலி ஆவணங்கள் மூலம் வங்கிக்கு ரூ.58 லட்சம் நஷ்டம் - மேலாளர் உள்பட  6 பேருக்கு கடுங்காவல்

சுருக்கம்

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக்கு ரூ.58 லட்சம் நஷ்டம் ஏற்படுத்திய வழக்கில், வங்கி மேலாளர் உள்பட 6 பேருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுசில் உள்ள கனரா வங்கியில் சிந்தாரிதிரிப்பேட்டையை சேர்ந்த டேவிட் என்பவர் ஒரு காலி மனையின் ஆவணங்களைக்காட்டி, கடந்த 2001, 2002ம் ஆண்டுகளில் கடன் வாங்கினார். இந்த சொத்தின் மீது, ஏற்கெனவே டேவிட் ரெப்கோ வங்கியிலும் கடன் வாங்கியுள்ளார்.

இதேபோல் அண்ணாநகரில் உள்ள ஒரு சொத்தின் மீதும் அவர் கடன் வாங்கியுள்ளார். இதற்கு வங்கியின் மேலாளராக இருந்த, விஜயராகவன் உதவி செய்துள்ளார்.

இந்த மோசடி மூலம் வங்கிக்கு ரூ.57 லட்சத்து 87,904 இழப்பு ஏற்பட்டது சிபிஐக்கு தெரியவந்தது.

இதையடுத்து, வங்கி மேலாளர் விஜயராகவன், பணம் வழங்கிய அதிகாரி மாரியப்பன், டேவிட், அவருக்கு உதவியாக இருந்த ஜைனா தாமஸ், ராஜேந்திர பிரசாத், கோவிந்தராஜுலு, இளங்குமரன், லோகநாதன், லட்சுமிபதி ஆகிய 9 பேர் மீது மோசடி, கூட்டுச்சதி, ஆவணங்களை போலியாக கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கே.வெங்கடசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை காலத்தில் மாரியப்பன் இறந்ததால் அவர் மீதான வழக்கு நீக்கப்பட்டது. மற்ற 8 பேர் மீதான வழக்கின் விசாரணை மட்டும் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதன் விவரம் வருமாறு:

வங்கியில் மோசடி செய்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், விஜயராகவனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதம், டேவிட்டுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம், ஜைனா தாமசுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.15 லட்சம் அபராதம், ராஜேந்திர பிரசாத்துக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.6 லட்சம் அபராதம், கோவிந்தராஜுலுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.4 லட்சம் அபராதம், லட்சுமிபதிக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.6 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

இளங்குமரன் மற்றும் லோகநாதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்வதாகவும், மொத்த அபராத தொகையான ரூ.67 லட்சத்தில் கனரா வங்கிக்கு ரூ.57 லட்சத்து 88,000 வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்களுக்கு குஷி.. ரூ.3000 பொங்கல் போனஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Tamil News Live Today 1 January 2026: அரசு ஊழியர்களுக்கு குஷி.. ரூ.3000 பொங்கல் போனஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு